அன்புருவம் பெற்றதன் பின் அருளுருவம் அடைந்து
பின்னர் இன்புருவம் ஆயினை!
மணிவாசக பெருந்தகையே உன் பெருமை
யாராலும் கூற முடியாதே!
திருவருட் பிரகாச வள்ளலார் கண் என் போற்றி துதித்தது நால்வரை! சம்பந்தர்!
நாவுக்கரசர்! சுந்தரர் ! மணிவாசகர்! மூவர் தேவாரமும், மணிவாசகர் திருவாசகமும் வள்ளலாரின் உயிர் மூச்சு!
ஆளுடைய பிள்ளை ஆளுடைய அரசு ஆளுடை நம்பி ஆளுடை அடிகள் என நால்வரை போற்றுகிறார்! இறைவனின் பரிபூரண அருளை பெற்று நால்வரும் நால்வகை மார்க்கத்திற்கு மிக சிறந்த உதாரணமாக விளங்கினர்! சதா காலமும் தேவார திருவாசகங்களை கேட்டு மகிழ்வார் ஆனந்தம் கொள்வார் வள்ளல் பெருமான்! ஆளுடைய ஆளுடைய என நால்வரும் அடை மொழி கொடுத்து உள்ளார்கள் வள்ளல் பெருமான் ! நால்வரும் சத்புத்ர மார்க்கம் தாச மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் என நால் நெறிக்கு உதாரணமாக திகழ்ந்தார்கள்! பரம்பொருளின் பரிபூரண ஆளுமையால் வாழ்ந்தார்கள்! நால்வரும் தண்ணி உணர்ந்து ஆளுமை திறத்துடன் திகழ்ந்தார்கள்! எனவே வள்ளல் பெருமான் கூறியதில் தவறோன்றுமில்லை.
இந்த நான்கிலும் உள்ள இன்னும் சில விசயங்களை பார்ப்போம்!
-----திருஞானசம்பந்தர்-----
திருஞானசம்பந்தர் பெருமான் மூன்று வயதில் சிவைதரு ஞானப்பால் உண்டு
அக்கணமே கண்ணன் பெற்றார்! "தோடுடைய செவியன்" என தேவாரம் பாட
ஆரம்பித்தார். சீர்காழி பதியினிலே சித்தத்திலே அமர்ந்த நற்காழி ஞான சம்பந்த
செல்வமே எனது சற்குருவே என போற்றுகிறார் வள்ளலார்!
"பரநாத மாந் தலத்தே ஒத்த தன்மயமாம் நின்னை
நீ இன்றி உற்றிடல் உயிரனுபவம்"
"பரம் பரத்துட் புறமாகி இனிப்புற ஒன்றும் இயம்புறா
இயல்பாய் இருந்தே அருளனுபவம்"
என்று எனக்கு அருள் புரிந்த ஞான சம்பந்த சற்குருவே!
வள்ளல் பெருமானுக்கு, உயிரனுபவமும், அருளனுபவமும் கூறியருளிய
சம்பந்த பெருமான் கடைக்கணித்து - கடைக்கண் காணித்து உனக்குள் தான்
அடிமுடி உள்ளது என்று அருளியிருக்கிறார்! இருகண்ணும் உள் சேரும் இடமே, கூடும் இடமே கடைக்கண்!
"என்பு பெண்ணுருவோடின்னுயிரது கொண்டெழுந்துந்திட புரிந்த" எலும்பைக்கொண்டு ,இறந்த பெண்ணை உயிர் கொடுத்து மீண்டும் உருப்பெறச் செய்தார்! திரு ஞான சம்பந்தர்!
"பெருமண நல்லூர்த் திருமணங்காண பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந்தோங்க கருணை செய்தளித்த " திருஞானசம்பந்தர் 16வது வயதில் திருமணம் புரிந்த போது , அவர் திருமணதிற்கு வந்த அனைவரையும் ஞான உருவடைந்து ஓங்க - ஒளியில் ஐக்கியமாகிட கருணை செய்தார்!
"கூண்டோடு கைலாசம்"! யார் புரிவார் இத்தகைய கருணை மழை!
"பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே"
தவத்தால் கண் சிவந்து பவளம் போலாகும்! அப்போது அக்கண்மணியில் முளைக்கும் ஓங்கும் ஒளி ! அதுவே கற்பக விருட்சம். கரும்புவே! கனியே! என் இருகண்ணே! கண்மணியே!
---- திருநாவுக்கரசர் ----
திருநாவுக்கரசர் ஆளுமை பெற்ற அரசு! இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட
திருநாவுக்கு அரசு! சைவத்து அணிகலனாக திகழ்ந்தார் அப்பர் சுவாமிகள்!
(அப்பர் நாவுக்கரசரின் இன்னொரு பெயர்). "எம்பாவமெல்லாம் அகற்றி அருட்பான்மை நல்கும் பண்புடைய பெருமானே" என வள்ளல் பெருமான் சொல்லரசரை போற்றி மகிழ்கிறார்! "கதிர்தரு கற்பகமே முக்கனியே ஞான்க்கடலே என்கருத்தே என் கண்ணுளானே" என்கிறார்!
"காளத்தியான் அவன் என் கண்ணிலுள்ளான் காண் " என அப்பர் சுவாமிகள் பாடியதை கொண்டு அப்பர் சுவாமிகளே! இறைவனே! என் கண்ணுளானே அவனே கதிர்தரும் கற்பகம் முக்கனி ஞானக்கடல் என்றும் என் கருத்தாக சித்தத்தில் இருப்பவன் என்கிறார் வள்ளல் பெருமான்!
"ஒண்ணுள்ளே ஒன்பது வாய் வைத்தாய்" என்கிறார் அப்பரை பின்பற்றி வள்ளலாரும்! நமது உடலில் ஒன்பது வாசல் இருப்பதை அறிவோம்! பத்தாவது வாசல் பெண்களுக்கு கருவாய்! அது சிற்றின்பம் நுகர படைத்தான் கடவுள் ! பத்தாவது வாசல் மனித குலத்துக்கு ஞானத்துக்கு 'ய' - இருகண் உள்சேரும் அக்னிகலை இடம்! அந்த வாசலில் '8'ம் '2'ம் 'அ'வும் 'உ' வும் சேர
'ய' வாகும் 10 ஆகும்! இந்த வாசல் திறக்கவே ஞானம் செய்வதே ஞான சாதனை! பத்தை பற்றுங்கள் உங்கள் பற்றாகிய கர்மம் தொலையும் ! அதற்கு முதலில் திருவடியை பற்றுக! "கற்றுணையாற் கடல் கடந்து கரையில் போந்து " நாவரசரை கல்லில் கட்டி கடலில் போட்டான் கயவன்! பஞ்சாட்சரம் ஓதி
பார் புகழ கல்லே தெப்பமாக மிதந்து கரைவந்து சேர்ந்தார் எம்சைவமணி திருநாவுக்கரசு! திலகவதி அம்மையாரின் தம்பியே! இறையாம் சிவமருள் பெற்றதில் அண்ணனே! தெய்வத்தின் அடியார் திருநாவுக்கரசர்! அந்த அடியாருக்கு அடியாராக விளங்கியவர் அப்பூதி அடிகள்! தம் மெய்யடியார்க்கு
மெய்ஞ்ஞானம் அருளிய வள்ளல் திருநாவுக்கரசர்! பாம்பு கடித்து மாண்ட அப்பூதியடிகள் பிள்ளையை உயிர்பெற செய்து அருளினார்!
--------சுந்தரமூர்த்தி சுவாமிகள் ------
இறைவனால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு வன்தொண்டர் என போற்றப்பட்டவர் நமது சுந்தரமூர்த்தி சுவாமிகள் ! தன்னையே ஆளும் திறன் பெற்ற ஒப்பற்ற ஞானவான் சுந்தரர்! வள்ளல் பெருமான் ஆளுடைய நம்பிகள் என்றார் பக்தியோடு ! மணிமுத்தாற்றில் இறைவர் தந்த பொன்னை கொட்டி பின் திருவாரூர் குளத்தில் அந்த பொன்னையெல்லாம் எடுத்த அற்புத சித்தரே ! சுந்தரமூர்த்தி சுவாமிகளே ! அவிநாசியிலே ஏரியில் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனை பல வருடங்கழித்து அந்த ஏரியில் நீர் வரவழைத்து முதலையை வரவைத்து அதன் வாயிலிருந்து சிறுவனை மீட்ட அருள் அற்புதத்திற்கு நிகரேது ! திருநாவலூர் பெருந்தகையே தேவரும் இந்திரனும் திருமாலும் நான்முகனும் மற்றுள்ள முனிவர் யாவரும் வியந்து பார்க்க சுந்தரமூர்த்தி பெருமானே நீவிர் வெள்ளை யானையில் ஏறி சேரமான் பெருமாள் நாயனார் குதிரையில் தொடர திருக்கைலாயம் சென்றதை நான் காணவில்லையே என வள்ளலார் வியந்து போற்றி மகிழ்கிறார் ! உவகை கொள்கிறார் !
சுந்தர மூர்த்தியான மெய்யடியார்க்கு அடியாராய் அந்த இறைவனே திருவாரூர் வீதியிலே தூது சென்றான் என்றால் , சுண்டரமூர்தியே உன் பெருமைக்கு நிகரேது நான்முகனும் திருமாலும் பெறாத பெரும் பேறல்லவா இது! வடலூரார் நாவலூரரை எண்ணி எண்ணி உருகி பாடிப் பரவயுள்ளார் !
இறைவனால் ஆளுமை பெற்ற பிள்ளை திருஞான சம்மந்தப்பெருமான் !
இறைவனால் ஆளுமை பெற்ற அரசு திருநாவுக்கரசப் பெருமான்!
இறைவனால் ஆளுமை பெற்ற நம்பி சுந்தர மூர்த்தி பெருமான்!
இறைவனால் ஆளுமை பெற்ற அடிகள் மாணிக்கவாச பெருமான்!
நால்வரும் நன்னெறியில் நால்நெரியில் உயர்ந்தோர்! திருநாவுக்கரசர் தாச மார்க்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக தொண்டு செய்து வாழ்ந்தார்!
திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக சிவையால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.பிள்ளை கைநோகுமோ என பொற்றாளம் ஒலிக்க அருளினாள்! சுந்தர மூர்த்திகள் சக மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! சிவனே இவனுக்காக தூது சென்றாராம்! சிறந்த தோழர் சிவனுக்கு! மாணிக்கவாசகரோ சன்மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! நானே நீ நீயே நான் என உணர்ந்தார்! உரைத்தார்! உறைந்தார் ஒளியிலே! இந்நால்வரும் வடலூரரை கவர்ந்த ஞானவான்கள்!
திருவருட் பிரகாச வள்ளலார் எப்போதும் திருவாசக பெருமை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் எனச் சொல்வர்!
இறைவன் ஆளுமை பெற்று ஒப்பற்று விளங்கும் ஞானமணி வாசகமாம் திருவாசகம் உரைத்த மணிவாசக பெருமான் பெருமை கூறமுடியுமோ ? "கருவெளிக்குப் பெருவெளிக்குப் பித்தாகி திரிகின்றோர் குருவேளிக்கே நின்று " நம் கரு என்பது உயிர்தங்கிய இடம் நம் கண்கள் உள்ளே! அங்கே இருக்குது வெட்டவெளி ? பெருவெளி அங்கேலயித்து அதிலே பித்தாகி திரிகின்றோர் குருவெளி -சிவம் தங்கிய பெருவெளியிலே நின்று நிலைப்பார்! சித்தம் போக்கு சிவம் போக்கு என்று அலைவர் . "மன் புருவ நடு முதலா மனம் புதைத்து" மனிதனின் புருவ நடு என்பது கண்மணி மத்தியில் உள்ள வாசல் மணிவாசல்
அதிலே மனம் புதைத்து தவம் செய்பவரே மணியிலே இருப்பவரே அங்கே குருவாக வந்து விளங்கும் அவரின் வாசகத்தை கேட்பார்! அதுவே மணிவாசகம்! இவர்களே முதலில் அன்புருவம் பெறுவர் பின் அருளுருவம் பெற்று அதன் பின்னரே இன்புருவம் பெற்றுய்வர்! வாதவூர் நாயகனே, நீ அருளிய திரு அண்ட பகுதி திருஅகவலில் நீ இரு என எனக்கியம்பியதாக எண்ணம் கொண்டு இன்புறுகிறேன் குருபிரானே! "வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் பாடுங்கால் என் ஊன்கலந்து உயிர் கலந்து
உவட்டாமல் இனிபதுவே" "மாணிக்கவாசக உன் வாசகத்தில் ஒரு மொழியே குரு மொழி எனக்கொண்டேன்" வேறொன்றும் எனக்கு வேண்டாம் என்கிறார் வாதவூரரை குருவாக கருதிய வடலூரார்!
இறைவனே குதிரை சேவகனாக வந்தும், பிட்டுக்கு மண் சுமந்து வந்தி எனும் மூதாட்டிக்கு அருள்பாலித்ததும் ,மாறன் பிரம்படி பட்டதும் மணிவாசகப் பெருந்தகையே உன் பொருட்டன்றோ! சுந்தருக்காக தூதுபோன
சிவன் மணிவாசகருக்கு மண் சுமந்தார்! மணிவாசகர் மகிமை மாநிலம் அறிய திருவிளையாடல் புரிந்தார்! இறைவன் அடியாருக்காக அடிபட்டரே! என்ன சொல்லிப் பாடுவது அடியாரை! அடியார்க்கு அடியாரை!
மாணிக்க வாசகா உன் திருவாசகம் கேட்டாலே பறவைகள் மிருகங்களுமே ஞானம் பெறுமென்றால் எனக்கு கிடைக்காதா என்ன?! மெய்ஞான நாட்டமுற மணிவாசகமாம் திருவாசகம் படி! கேள்! திருவாசகத்தை கேட்க என் செவிகள் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்! திருவாசகத்தை படிக்க
என் வாய் பல கோடி புண்ணியம் செய்து இருக்கவேண்டுமே !
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!
ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டிய ஞான பொக்கிஷம் திருவாசகம்!
இறைவனே தன் கையால் ஓலை சுவடியில் மணிவாசகர் சொல்லச் சொல்ல எழுதிய ஒப்புயர்வற்ற ஞான நூல்! இதன் பெருமைக்கு அளவே இல்லை!
திருவாசகத்தில் தோய்ந்து தோய்ந்து திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடிய பாமாலைகளே திருவருட்பா ! திருவாசகத்தின் மகிமையை திருவருட் பிரகாச வள்ளலிடம் தான் கேட்க வேண்டும்!
"தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம்"
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட் பாமாலை

No comments:
Post a Comment