Friday, 27 September 2013

இதுவே ஞான தவம்!!!

திருமந்திரம்:
==========

“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே”. பாடல் – 113

விண்ணின் றிழிந்து:
-----------------------------
- நமது உடலில் விண் என்பது சிரசு, உச்சந்தலை. அதிலிருந்து ஒரு நாடி உள்ளே கீழே இறங்கி வருகிறது.

வினைக்கீடாய் மெய்கொண்டு:
--------------------------------------------
– ஒவ்வொரு ஆன்மாவும் அவரவர் பூர்வ ஜென்மங்களில் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி உடல் எடுக்கிறது. இப்படி உருவான மனித தேகத்தில்

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து:
-------------------------------------------------------------------------
– குளிர்ச்சி பொருந்திய திருவடிகளை தலைக்கு காவலாக முன்பாகத்திலே வைத்து! காவல்காரன் வாசலில் தானே இருப்பான். நம் உடம்பின் உட்புகு வாசலாம் கண்ணே குளிர்ச்சி பொருந்திய இறைவனின் திருவடி தாமரை என்பதாகும்.

உள்ளே இருக்கும் இறைவனுக்கு வாயில் காப்போன் “கண்” “துவார பாலகர்கள்” – கண்மணியில் சிறு துவாரம் உள்ளது. அந்த கண்மணி இளசு. அதனால் பாலகர் என்றனர்.

துவாரம் கொண்ட பாலகர்கள் துவார பாலகர்கள். இறைவனின் வாயில் காவலர்கள்.

உண்ணின் றுருக்கி:
-----------------------------
– நாம் நம் கண்மணி ஒளியை நினைத்து உணர்ந்து சும்மா இருக்கும் போது கண் உள்நின்று உருக்கி நம்மை நெகிழ்ச்சியடைய வைப்பது உள் ஒளியே ஆகும். உருகணும், உருகி உருகி தான் கரையணும்.

ஓரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக்:
----------------------------------------------------------------

– நாம் தவம் செய்யச் செய்ய கிட்டுவதே பேரானந்தம்.அது எதனால் கிட்டும் தெரியுமா? கண்ணில் நின்று களிதரும் ஒளியை காட்டுவதால்! நாம் நம் கண் ஒளியை கண்டாலே பேரானந்தம்.

களிம்பறுத் தானே:
----------------------------

– நம் ஆன்மாவில் படிந்துள்ள களிம்பு நம் கர்மங்கள். இவைகளை ஒளியால் எரித்து சுத்தப்படுத்தினாலே ஆன்மா பரிசுத்தமாகும். கண் ஒளியைப் பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று போகும். இதுவே ஞான தவம்.

குருவே சரணம்! குரு திருமலரடியே சரணம்!

1 comment:

  1. How? The verse is saying some man did it - களிம்பறுத் தானே. You are saying we have to do it. Are you dropping the த் and interpretting it as "களிம்பறு தானே" to make it directed to second person?

    ReplyDelete